2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கை
முதல் நாளிலும் இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 712,319 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.
மேலும், கடந்த மூன்று நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத அஞ்சல் மூல வாக்காளர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 அல்லது 12 ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.