Home முக்கியச் செய்திகள் தலைவர் பிரபாகரன் கைப்பற்றப்பட்டால் உடனே சுட்டுக்கொன்றுவிட உத்தரவு!

தலைவர் பிரபாகரன் கைப்பற்றப்பட்டால் உடனே சுட்டுக்கொன்றுவிட உத்தரவு!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி பின்நாட்களில் பல இந்தியப் படைத் தளபதிகள் செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியப் படையின் உயரதிகாரியான லெப். ஜெனரல் எஸ்.சி. சர்மேஷ்பண்டே 1992 இல் எழுதிய ‘அஸய்ன்மென்ட் ஜப்னா (ASSIGNENT Jaffna) என்ற புத்தகத்தில் (Lancer Publication Pvt.Ltd)இந்தியப் படையினரின் முற்றுகைகள் பற்றி விரிவாக விபரித்துள்ளார்.

அதேபோன்று இந்தியப் படையின் மற்றொரு முக்கிய அதிகாரியான லெப்.ஜெனரல். திபீந்தர் சிங் எழுதிய ‘ஐ.பி.கே.எப். இன் சிறிலங்கா’ (I.P.K.F in Sri Lanka) என்கின்ற புத்தகத்திலும் (Thrishul Publication) , இந்திய இராணுவ ஆய்வாளர் ராஜேஷ் காடியன் எழுதிய ‘இந்தியாஸ் சிறிலங்கன் பியஸ்கோ’ (India’s Sri Lankan Fiasco- Peacekeepers atwar) என்கின்ற ஆய்வு நூலிலும் (Vision Books Pvt. Ltd), புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் முற்றுகைகள், நடவடிக்கைகள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விட பல செவ்விகள் ஊடாகவும் புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி பல உண்மைகள் வெளியாகியுள்ளன.

ஈழத்தில் படு தோல்வியடைந்து தாய்மண் திரும்பியிருந்த பல இந்தியத் தளபதிகள் இணையத்தளங்களுக்கு வழங்கிய செவ்விகளில், ஈழத்து நினைவுகளை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியாவின் பிரபல ஊடவியலாளர் ஜோசி ஜோசப்  இந்திய தளபதிகளின் அனுபவங்களை செவ்விகண்டு வெளிக்கொணர்ந்து இணைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

பலர் தமது தரப்பு பின்னடைவுகளை மனச்சாட்சியுடன் வெளியிட்டிருந்தார். ஆனால் சிலரோ விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத வகையில் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

அவ்வாறு இந்தியப் படையின் நடவடிக்கைகள் பற்றி தனது செவ்வியில் கருத்து தெரிவித்திருந்த பலருள் ஏ.ஸ்.கல்கட் உம் ஒருவர்.

1988ம் ஆண்டு ஜனவரி முதல் இந்தியப் படை திருப்பி அழைக்கப்படும்வரை இலங்கையில் இந்தியப் படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயலாற்றிய உயரதிகாரிதான் லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். இணையத்தளம் ஒன்றிற்காக இந்திய ஊடகவியலாளர் ஜோசி ஜோசப்க்கு கல்கட் வழங்கிய செவ்வியின் சில பகுதிகளை இச்சந்தர்ப்பத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


கேள்வி: ஈழ யுத்தத்தில் இந்தியப் படைகள் அதிக இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றனவே. இவற்றைக் குறைத்திருக்க முடியாதா?

பதில்: சண்டையிலோ அல்லது யுத்தத்திலோ இழப்புக்கள் தவிர்க்க முடியாதது. சில இராணுவத்தினர் சண்டைகளின்போது உடற் கவசங்களைப் பாவிப்பார்கள். அப்படி உபயோகிக்கும் சில வீரர்கள் தமது உயிர்களை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளக் கூடும். ஆனால் எனது வீரர்களிடம் அந்த வசதிகள் அப்பொழுது இருக்கவில்லை. இல்லாத ஒன்றை கேட்கவும் முடியாது.

உண்மையிலேயே அப்பொழுது எங்களிடம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளோ, பொறி வெடிகளைக் கண்டு பிடிப்பதற்காக தொழில்நுட்பக் கருவிகளோ கிடையாது. இந்திய இராணுவமே கூட பின்னர்தான் இதுபோன்ற கருவிகளைப் பெற்றுக்கொண்டது.

நாங்கள் நாகலாந்து போன்ற இடத்தில் சண்டைபிடிப்பது போன்று இலகுவான ஒரு விடயமாக வன்னிச் சண்டைகள் இருக்கவில்லை. ஒரு சக்திவாய்ந்த, மோசமான ஒரு போராளிக் கூட்டத்தை நாங்கள் வன்னியில் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய விமானப் படை ஏன் முழு அளவில் பயன்படுத்தப்படவில்லை.


பதில்:
ஆகாயப் படை வீணான சிவிலியன் இழப்புக்களையே ஏற்படுத்தும் என்பதால் விமானப் படைப் பலத்தை நாங்கள் அதிகம் பிரயோகிக்கவில்லை. ஆட்டிலறிகளைக் கூட காடுகளை நேக்கிக் குண்டு வீசுவதற்கு மாத்திரமே நாங்கள் பயன்படுத்தினோம். அப்பொழுது எங்களிடம் பழைய எஸ்.எல்.ஆர் (SLR-Self Load Rifle) ரகத் துப்பாக்கிகள் மாத்திரமே இருந்தன.

இது எதிர் கொரில்லாப் போரியலுக்கு ஏற்றாற்போன்று வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. காடுகளுக்குள் இத்தகைய பெரிய நீண்ட துப்பாக்கிகளைக் காவிச் செல்லும்போது மரக்கிளைகளில் அவை சிக்கிக்கொள்ளும் தடைகள் ஏற்பட்டன. சுடும் வேகமும், சுடப்படும் ரவைகளின் எண்ணிக்கையும் இத்துப்பாக்கிகளைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவு.

கொரில்லாப் போரை எதிர்கொள்வதற்கு ஏற்றாற்போன்று எமது இராணுவத்தினரிடம் ஆயுத வசதிகள் இருக்கவில்லை. இரவில் இருளிள் பார்ப்பதற்கான கருவிகள் எங்களிடம் இருக்கவில்லை. எம்மிடம் இருந்த தொலைத்தொடர்புக் கருவிகள் மிகவும் பாரமானவைகளாக இருந்தன.

எம்மிடையேயான தொலைத்தொடர்புகளும், புலிகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன.
பின்னர் படிப்படியாக இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்தது. என்னுடைய படை வீரர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தேன். எதிரியிடம் இருந்து ஏ.கே-47 ரகத் துப்பாக்கியை நீங்கள் கைப்பற்றினால் தாராளமாக அதனை நீங்கள் உபயோக்கிக்கலாம் என்கின்ற அனுமதியை அவர்களுக்கு நான் வழங்கியிருந்தேன். புலிகளிடம் இருந்து கைப்பற்றி நவீன ஆயுதங்களை எமது படை வீரர்கள் உபயோகிக்கலானார்கள்.

கேள்வி: உங்களுடைய தலைமையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் அதிகமாக உங்கள் உள்ளத்தைத் தொட்ட சம்பவம் எது?


பதில்:
முதலாவது யாழ் நகரைக் கைப்பற்றுவற்கு ஆறு, ஏழு நாட்களாக இடம்பெற்ற சண்டைகள். பக்க வாட்டில் இருந்து தாக்குவதற்காக இரண்டு பட்டாலியன்களை நான் எனது தலைமையில் நகர்த்தியிருந்தேன். புலிகளுடன் பலத்த சண்டையை நாம் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

கடைசியில் அதில் வெற்றிகொண்டு வீர் சக்ரா(Vir Chakra) விருதை நாம் பெற்றுக்கொண்டோம்.

ஆனால் என்னை அதிகம் பாதித்த இராணுவ நடவடிக்கையாக வன்னியில் நித்திகைக்குளக் காட்டில் இடம்பெற்ற யுத்தத்தைத்தான் நான் குறிப்பிடுவேன். வவுனியாவின் கிழக்கில் அமைந்துள்ள அடர்ந்த காடு அது.

அங்கு விடுதலைப் புலிகளின் முக்கிய மறைவிடம் அமைந்திருந்தது. 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்பிரதேத்தில் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டேன் அந்த நடவடிக்கை மூலமாக அந்தக் காடுகளில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளை ஒரேயடியாக துடைத்தெறியத் தீர்மானித்தேன்.

செப்டெம்பர் மாதத்தில் வடக்கு கிழக்கில் தேர்தல்களை நடத்தத் தீர்மாணித்திருந்ததால், ஆகஸ்டில்; அந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டேன். முதலில் மட்டக்களப்பை நாங்கள் இதுபோன்ற நடவடிக்கை மூலம் ஏற்கனவே துப்பரவு செய்திருந்தோம். பின்னர் திருகோணமலையையும் அவ்வாறே துப்புரவு செய்திருந்தோம்.

யாழ்பானத்தின் குடாப் பிரேசத்திலும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். எதிரிகள் நகரப்புறங்களில் இருந்து அகன்று அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடையவேண்டி ஏற்பட்டது. அவர்களுடைய முதுகெலும்புகள் உடைத்தெறியப்பட்டிருந்தன. அவர்களை முற்றாகவே ஒழித்துக்கட்டும் நோக்குடனேயே காடுகள் மீதான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

எமது படையின் ஒரு முக்கியமான பிரிவினரான பராக் கொமாண்டோக்கள் வெற்றிகரமாக முன்னேறி காடுகளில் இருந்த புலிகளின் இருப்பிடங்களைக் கைப்பற்றியிருந்தார்கள்.

நுழைந்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு நுழைந்த சுரங்கப் பாதையில் இருந்து, அவர்கள் நுழைவதற்கு சற்று முன்னர்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச்சென்றிருந்தார். புலிகளின் தலைமைக் காரியாலயத்தை நாங்கள் தகர்த்திருந்தோம்.
தொடர்ச்சியான பல பங்கர்கள் அந்த சுரங்கப் பாதையுடன் இணைக்கப்பட்டிருந்தன.

முதலாவது பங்கரில் எமது பராக் கமாண்டோக்கள் நுழைந்த போது, புலிகளின் தலைவர் பிரபாகரன்  இரண்டாவது பங்கருக்குள் இருந்து இருக்கின்றார். அவர் பின்னர் மூன்றாவது பங்கருக்குள் நுழைந்து பின்னர் தப்பிச்சென்றுவிட்டார். அங்கு புலிகளின் பல முக்கியஸ்தர்களை நாங்கள் கைது செய்திருந்தோம். பல தலைவர்களைக் கைது செய்தோம். பல ஆவனங்களைக் கைப்பற்றினோம். புலிகளின் கட்டளைப் பீடத்தையே முற்றாக அழித்தோம்.

இவ்வாறு இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதி ஏ.எஸ். கல்கட் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.

செவ்வி கண்டுகொண்டிருந்த ஜோசி ஜோசப் அடுத்து ஒரு கேள்வியை கல்கட்டிடம் கேட்டார்.
‘பிரபாகரன்  கைப்பற்றப்பட்டால் உடனே அவரைச் சுட்டுக்கொன்றுவிடுமாறு நீங்கள் உங்கள் படை வீரர்களுக்கு உத்திரவிட்டிருந்திர்கள் என்பது உண்மையா?


தொடரும்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version