ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake), சீனாவிற்கான(china) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (13) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
அவருடன் அமைச்சர்களான விஜித ஹேரத்(vijitha herath) மற்றும் பிமல் ரத்நாயக்க(bimal rathnayake) ஆகியோரும் அவருடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்திற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்(xi jinping) அழைப்பு விடுத்திருந்தார்.
சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி இம்மாதம் 17 ஆம் திகதி இலங்கை திரும்ப உள்ளார்.
சீன ஜனாதிபதி உட்பட உயர்மட்ட சந்திப்பு
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ சங் (Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.
அத்துடன் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.