மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை வேளனா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
இதன்போது, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, ஜனாதிபதி அநுரவை அன்புடன் வரவேற்றார்.
மாலைத்தீவின் வேளனா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழு அந்நாட்டின் மிக அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியது.
கலாசார நடனம்
அத்துடன், இதன்போது ஜனாதிபதி அநுர சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று பிற்பகல் மாலைத்தீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டுள்ளனர்.
