Home இலங்கை அரசியல் இலங்கை வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம்

இலங்கை வரலாற்றில் அமைதியான தேர்தல்: தமிழர் பகுதிகளின் வாக்குபதிவு நிலவரம்

0

முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்ற வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 69.47  சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறை சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில நேரங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு அளவில் வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை
அறிவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் 

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் 72 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி செயலாளர் நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 56.34 வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார்.

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version