Home இலங்கை சமூகம் முள்ளிவாய்க்கால் பாடசாலை ஒன்றுக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம்

முள்ளிவாய்க்கால் பாடசாலை ஒன்றுக்கு அதிபரை நியமிக்க கோரி போராட்டம்

0

முள்ளிவாய்க்கால் (Mullivaaikaal) கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு
பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலை வாயில் முன்பாக பெற்றோர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் (19.06.2024) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு (Mulliativu) முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ் கலவன்
வித்தியாலயம் கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமல் இயங்கி வருகின்றது.
இந்தப் பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர். 

நிலையான அதிபர்

இந்தப் பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், நிலையாக அதிபரை நியமித்து அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் பெற்றோருடன்
கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர்.

வலயக்கல்விப் பணிப்பாளர்

அதனையடுத்து, பெற்றோருக்கும் பொலிஸாருக்கும் இடையில் குறித்த பிரச்சினை
தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த இடத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் இ. தமிழ்மாறன் வருகை தந்ததையடுத்து, அவருடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

இதன்போது, வலயக்கல்விப் பணிப்பாளர், கிழக்கு
முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மை காரணமாக எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது எனவும் அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Source: https://tamilwin.com/article/protest-for-the-appointment-of-a-principal-1718797328

NO COMMENTS

Exit mobile version