Courtesy: H A Roshan
திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் கிண்ணியா, தம்பலகாமம் எல்லையை பிரிக்கும், முள்ளியடி சிவப்பு பாலம் அருகில் கழிவுப் பொருட்கள் அதிகமாக கொட்டப்படுகின்றன.
இங்கு கொட்டப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் உள்ளன.
இதன் காரணமாக, பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் ஏற்படலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய நடவடிக்கை
கழிவுப்பொருட்களை முறையாகவும் சீராகவும் கையாள்வதற்கும், திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்த தவறும் பட்சத்திலும் சிவப்பு பாலம் சுற்றுச்சூழல் குப்பைகளால் அழிவுறும் ஆபத்தினை மிக அண்மையில் எமது கண்களால் பார்க்க நேரிடும்.
இந்நிலையில், சிவப்பு பாலம் சுற்றுச்சூழல் கழிவுகளைக் கொட்டும் பூமி அல்ல. அதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதுதான் எமது விருப்பும் எதிர்பார்ப்பும் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயத்தில் பொதுமக்கள் உட்பட கிண்ணியா பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய அரச துறையினர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.