நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தென்னை பயிர்ச்செய்கை சபை இன்று (23) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு(colombo), ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் விநியோக நிகழ்ச்சி
கொழும்பு எல்லைக்குட்பட்ட வெலிக்கடை காவல்துறை அருகாமையிலும், கிருலப்பனை பொது சந்தை மற்றும் நிதி அமைச்சு வளாகத்திற்கு அருகாமையிலும், நடமாடும் லொறிகள் மூலம் நடமாடும் தேங்காய் விநியோக நிகழ்ச்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் செயல்படுத்தப்படும்
கடுவெல மற்றும் பத்தரமுல்லை அதிகார வரம்புகளை உள்ளடக்கி, செத்சிரிபாய அரச அலுவலக வளாகம் மற்றும் டென்சில் கொப்பேகடுவ தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு அருகாமையில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை தென்னைச் செய்கை சபை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இங்கு தேங்காய் 100 – 120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபை மேலும் தெரிவித்துள்ளது.