ராஜபக்சக்கள் ஆட்சியை மீளக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் ஈஸ்டர் தாக்குதல் சூழ்ச்சியை முன்னெடுத்தனர் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் ராஜபக்சக்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் மைத்திரி – ரணிலுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதுடன் மறு பக்கம் இனவாத அடிப்படையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விரோத, சிங்கள இனவாத அமைப்புக்களை திட்டமிட்ட அடிப்படையில் ராஜபக்சக்கள் உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகத்தில் இனவாத கருத்து திணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் கட்டமாக இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூழ்ச்சித் திட்டத்தை கருத முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஆண்டில் கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையைப் போன்றதொரு மக்கள் ஆணை மைத்திரி அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ராஜபக்சக்களினால் மீண்டும் அரசியல் மேடைகளில் ஏற முடியாத சூழ்நிலை உருவானதாகவும் அதனை முறியடிக்கும் நோக்கில் இனவாத அரசியல் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவின் ஊடாக இனவாத சிங்கள மற்றும் இனவாத முஸ்லிம் அமைப்புக்களை ராஜபக்சக்கள் உருவாக்கி பராமரித்தனர் என பிமல் ரட்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
