Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜப்பானின் (Japan) சுகுபாவில் இலங்கையர்களுடனான பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் உத்தேச 22ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், அதற்காக 10 பில்லியன் ரூபாய் செலவிடப்படவேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பு
இந்தநிலையில், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறானதொரு திருத்தத்தை இந்த தருணத்தில் கொண்டு வர சதி செய்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83ஆவது சரத்தில் 22ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்ட சூழ்நிலையில் 22ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், அதற்காக 10 பில்லியன் ரூபாய்கள் செலவாகும்.
இருப்பினும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாயை செலவிடுவதற்கு கூட ஜனாதிபதி தயாராக உள்ளார்.
அனுரகுமார சவால்
எனினும், 22ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பல வாரங்கள் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் அதற்குள் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் தாம் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பத்திலேயே ரணில் உள்ளார்.
எந்த கட்சியில், சின்னத்தில் போட்டியிடப் போகிறார் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால், தேர்தல் குறித்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார் என்று அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த திஸாநாயக்க, தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் அனைத்தையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஜனாதிபதி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளையும் வெளியிடுமாறு அனுரகுமார சவால் விடுத்ததுள்ளார்.