Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) நற்பெயரை உயர்த்துவதற்காக அரச நிதிகள், வாகனங்கள் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படுவதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி செய்தியாளர் மாநாட்டில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம்
தேர்தல் பிரசாரங்களுக்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்துவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், அத்தகைய நடைமுறைகளுக்கு எதிராகவே காலிமுகத்திடல் போராட்டம் உருவானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், சமூக பொலிஸ் குழுக்கள் அரசியல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பிரசாரங்களை ஏற்பாடு செய்து வருகின்றன.
இலவச பத்திரங்கள்
தேசிய இளைஞர் பேரவை இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், மக்களை ஏமாற்றி இலவச பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த பணிகளுக்காக பாரிய தொகை செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
