நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு ராஜபக்சர்களும், பொதுஜன பெரமுனவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.
மேலும் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரியிருந்தேன் எனவும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோகித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது.
ராஜபக்ச ஆதரவு
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ரணில் விக்ரமசிங்க,
“நாடு நெருக்கடியை எதிர்நோக்கி சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிய போது பதில் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றேன்.
அதன்பின்னர் நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்புவது தொடர்பாக சிந்தித்தேன்.
அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
சஜித்திடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
அனுரகுமாரவும் அப்போது எதனையும் தெரிவிக்கவில்லை. அதன்பின்னர் மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரியிருந்தேன்.
ஜனாதிபதியாக தெரிவு
அதன்பின்னர் கட்சி தரப்பினரும் கலந்துரையாடி பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எனது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அதன்பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றிலும் பொதுஜன பெரமுனவினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அவர்களின் ஒத்துழைப்பினால் தடையின்றி என்னால் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்” என தெரிவித்துள்ளார்.