தொடர்ச்சியான வெளிநாட்டு உதவிகளை நம்பியிருக்காத இலங்கையை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல – மொனார்க் இம்பீரியல் விருந்தகத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 73வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில், “நாம் கடந்த இரண்டு ஆண்டுகளின் திட்டத்தைப் பற்றி இப்போது விரிவாகப் பேசத் தேவையில்லை. எம்மால் நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்த முடிந்தது.
நாட்டின் பொருளாதாரம்
அவ்வாறு ஸ்திரப்படுத்ப்பட்ட நாட்டின் பொருளாதாரம் தொடர்வதை உறுதி செய்வதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளோம். எங்கள் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம்.
சிலர் நாட்டைப் பற்றிப் பேசினாலும், சுயலாபத்திற்காகச் செயல்பட்டாலும், எமது அர்ப்பணிப்பு தேசத்துக்காக மட்டுமே. புதிய இலங்கையை கட்டியெழுப்புவதே எங்களின் தற்போதைய இலக்கு.
நாம் நமது சொந்த வளங்களைப் பாதுகாத்து, எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.“ என குறிப்பிட்டுள்ளார்.