தமிழ் மக்களுக்கான, அடிப்படை உரிமைகள்,
அரசியல் அபிலாசைகள், தமிழ் மக்களை முன்னிறுத்துவதற்கான எந்தவிதமான
செயல்திட்டங்களையும் அரசாங்கம் முன் வைக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின்
37ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும், குருமண்வெளியில்
அமைந்துள்ள அச்சங்கத்தின் மண்டபத்தில் நேற்று (26.12.2024) மாலை
இடம்பெற்றது.
இதன்போது, கருத்து
தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்,
“எதிர்காலத்தில் அரசியல் உரிமையும், அரசியல் அபிலாசைகளும், அரசியலிலே
தீர்மானிக்கின்ற சக்தியாக நமது மக்கள் வர இருக்கின்ற தேர்தல்களிலும் மிக மிக
அவதானமாக எந்த விதமான அரசியல் நிகழ்ச்சி திட்டத்தின் மத்தியிலும் சரியான
தீர்மானத்தை எடுப்பவர்களாக மக்கள் இருக்க வேண்டும்.
தமிழரசு கட்சி
தமிழ் மக்கள்
உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழ் மக்களின்
எதிர்கால வாழ்க்கைக்காகவும் மிக உறுதியான கட்சியாக தமிழரசு கட்சியிருந்து
கொண்டிருக்கின்றது.
அதன் வெளிப்பாடுதான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற
தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே எனக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்த வேலையில் நான் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
எதிர்காலத்திலும் அவ்வாறான உறுதியான நிலைப்பாட்டுடன் எனது
மக்கள் நடந்து கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். இதன் மூலம் தமிழ் தேசியத்தை
பாதுகாப்பதற்கும் நமது மக்கள் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்க
வேண்டும்.
மக்கள் எதிர்காலத்திலே பல துறைகளிலும் வெற்றி அடைகின்ற போது அல்லது திறமைகளைப்
பெற்றுக் கொள்ளுகின்ற போது அதில் திருப்தி அடைந்து விடக்கூடாது.
இன்னும்
அத்துறைகளில் மேலும் அவற்றை அவற்றை சரியாக முன்கொண்டு செல்ல வேண்டும். அதனை
எவ்வாறு இன்னும் மேம்படுத்த வேண்டும் போன்ற நிகழ்ச்சி திட்டத்தின்
அடிப்படையில் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் இதுபோன்ற
வரையறுக்கப்பட்ட சிக்கனம் மென்மேலும் வளர்ச்சி அடையும்” என குறிப்பிட்டுள்ளார்.