Home இலங்கை அரசியல் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை

0

நாட்டில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்க யாரும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின்
பொறிமுறையை ஏற்கத் தவறினால் அரிசி ஆலைகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் அரிசி பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கம் ஒரு பொறிமுறையை
உருவாக்கும் என்றும், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் ஒரு
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது குறிப்பிட்டுள்ளார்.

தரவுகளில் மிகப்பெரிய முரண்பாடு உள்ளதால் ஒரு அரசாங்கம் எவ்வாறு
முடிவுகளை எடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில பெரிய அரிசி ஆலைகள் இருப்புக்களை பதுக்கி வைத்திருப்பது தவறானது என்றும்
அநுரகுமார இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கண்காணிப்பு நடவடிக்கை

அரசாங்க பொறிமுறையை ஏற்கத் தவறும் ஆலைகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வரப்பட்ட பிறகு, ஆலையால் வழங்கப்படும் அரிசியின் பதிவுகளுக்காக,
இராணுவத்தினர், ஆலைகளில் நிறுத்தப்படுவார்கள்.

அத்துடன், கடைகளுக்கு அரிசி
எந்த விலையில் வழங்கப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.

எனினும், ஆலைகள் அவற்றின் உரிமையாளர்களாலேயே நிர்வகிக்கப்படும். அத்துடன், அதன்
ஊழியர்களாலேயே இயக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரிசி விடயத்தில் ஜனநாயகம்

இந்தநிலையில், அத்தகைய நடவடிக்கை ஜனநாயகமா என்று குறித்த தொலைக்காட்சி
நிகழ்ச்சியில், கேட்கப்பட்டபோது, இந்த நாட்டில் அரிசி விடயத்தில் ஜனநாயகம்
பற்றி பேசுவது அபத்தமானது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசாங்கம் விரைவில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிக்கும் என்றும்,
அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்கக்கூடிய
விலையில் நெல்லை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நெல் கொள்வனவு செய்வோர், நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்ய
வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version