வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அரசாங்க நிதி இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்(Rishad Bathiudeen )கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) ஆதரவளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த நிதி நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட கழகங்கள், நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கணிசமான தொகையை ஒதுக்கியமைக்காக பதியுதீன், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
திட்டங்களை நிறுத்த உத்தரவு
எனினும், அந்த திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி அந்த ஒதுக்கீட்டை திரும்பப் பெறுமாறும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.ஆனாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தலைவராகவும், கடந்த சில தசாப்தங்களாக உங்கள் கீழ் பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவத்தின் மூலம், உன்னதமானவர் எப்போதும் உண்மையுள்ளவராகவும், விடாமுயற்சியுள்ளவராகவும், சிறந்த தார்மீக மற்றும் நெறிமுறைகளைக் கொண்டவராகவும் இருந்தீர்கள் என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
உங்களுக்குத் தெரியாமல் நடவடிக்கை
இவ்வாறான நிலையில், மேற்கூறிய காரணத்தினால், சில தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளால் நெறிமுறையற்ற வகையில், உங்களுக்குத் தெரியாமல், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன், என பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறும், அந்த கடிதங்களை உடனடியாக இரத்து செய்து, திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டிய கட்டாயம்
இந்த நடவடிக்கை தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்பதால், உரிய நிதியை திருப்பிக் கொடுக்குமாறும், இதுபோன்ற நெறிமுறையற்ற செயல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைநிறுத்தி ஜனாதிபதி செயலகம் கடிதம் வழங்கியதை அடுத்தே பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.