Courtesy: Sivaa Mayuri
மாத்தளை (Matale ) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்கல பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
வேனில் வந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்ட பின்னர் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் உட்பட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றதாக முறையிடப்பட்டிருந்தது.
தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள்
இதனையடுத்து, விசாரணை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கண்காணிக்கப்பட்டு, காலியில் ஒரு இடத்தில் விற்பனை செய்யப்பட்ட மாணிக்கக் கல்லை மீட்க முடிந்தது.
இந்தநிலையிலேயே மாவத்தகம பிரதேசத்தில் உள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் உட்பட 10 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்
முன்னதாக இந்த குழுவினர், வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டபோதும், அதைச் செயல்படுத்த முடியாமல் போகவே, விலைமதிப்பற்ற இரத்தினக்கல் இருந்த வீட்டை குறிவைத்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களில் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மீதம் உள்ள பணத்தை மீட்கவும், மேலும் இருவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.