உக்ரைனை குறி வைத்து ரஷ்யா (Russia) நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரம் இருளில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்ட தாக்குதல்
ரஷ்யா இந்த பிராந்தியத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைனிய துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா தெரிவித்துள்ளார்.
கடல்சார் தளவாடங்களுக்கான உக்ரைனின் அணுகலைத் தடுப்பதற்கான ரஷ்யாவின் முயற்சியே இந்தத் தொடர் தாக்குதல்கள் என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை எண்ணெய் கொள்கலன்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், உக்ரைனின் கடல் வழிகளைத் துண்டிப்பதாக டிசம்பர் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தியிருந்தார்.
ரஷ்யா மீது தடை
நிழல் கடற்படை என்பது 2022 ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான எண்ணெய் கொள்கலன்களை குறிக்கும் சொல்லாகும்.
இந்நிலையில், ஓடெசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிவில் கப்பல் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
நடத்தப்பட்ட தாக்குதல்களால் 120,000 மக்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு முக்கிய துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
