அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் இயலாமையினை மாத்திரமே வெளிப்படுத்துகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சாகர காரியவசம் இதனை கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “ஜனநாயக நாட்டில் பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் அரசியலமைப்பின் ஊடாக அனைவருக்கும் உரித்தாக்கப்படடுள்ளது.
நாட்டின் சட்டத்தின் ஆட்சியை நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய பிரதான நிறுவனங்கள் பாதுகாக்கின்றன.
சட்ட ஆட்சியை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மீது தற்போது அரசியல் தலையீடு மற்றும் அழுத்தங்கள் மிதமிஞ்சியுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனம்..
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார மேடைகளில் இருந்தவர்களில் ஒருவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், பிறிதொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இன்று பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி பொலிஸ் சேவையில் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு என்பன இடம்பெறுகின்றன.
சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அரசாங்கம் வெளிப்படையாகவே அழுத்தம் பிரயோகிக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக சட்ட மா அதிபருக்கு வழங்கப்பட்ட வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரத்தை பிறிதொரு தரப்புக்கு கையளிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது முறையற்றது.
கடந்த கால செயற்பாடுகள்
அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் வெகுவிரைவில் சிறைக்குச் செல்வார்கள் என்று ஆளுந்தரப்பின் உறுப்பினர் பொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளமை ஜனநாயகத்துக்கு எதிரானது.
கடந்த காலங்களில் வீதியில் இறங்கி போராட்டங்களில் மாத்திரம் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜனநாயக அம்சங்களை விளங்கிக்கொள்வது கடினமானது என்பதை இந்த கூற்று வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் இயலாமையினை மாத்திரமே வெளிப்படுத்துகிறது.
அச்சுறுத்தல்களினால் மாத்திரம் குறைகளை மூடிமறைக்க முடியாது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று அனைத்தையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் எந்த எதிர்க்கட்சியும் தற்போது இல்லை. நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
