Home இலங்கை அரசியல் சம்பந்தனின் மறைவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவருமான இரா.சம்பந்தனின் மறைவு குறித்து சர்வதேச நாடுகளின் தலைவர்களும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

 ஜுலி சங்

இலங்கையில் சமாதானமான சமூகத்தை கட்டியெழுப்புவதை முதன்மையாக கொண்டு மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழசுக் கட்சியின் பெரும் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியலில் ஈடுபட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கான சம உரிமை தொடர்பான அவரின் கருத்துக்கள், இலங்கையிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பான பரந்த புரிந்துணர்வை ஏற்படுத்தியதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பந்தனின் அரசியல் நடவடிக்கைகள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அமெரிக்கா சார்பில் தான் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக ஜுலி சங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மார்க் அன்றூ பிரேன்ச்

இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக இலங்கை பாரியதொரு இழப்பை சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சம உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த சம்பந்தன், அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி அரசியல் ஈடுபட்டதாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்ட்ரூ பற்றிக்

இதேவேளை, தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த சம்பந்தனின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை எப்போதும் நினைவில் இருக்குமென சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். 

 பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகம்

அத்துடன், தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் மறைவு குறித்து மிகுந்த கவலையடைவதாக இலங்கையில் உள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுடன் அவர் நீண்ட காலமாக கொண்டிருந்த உறவையும் இலங்கையில் தமிழர்களுக்கான கண்ணியம், நீதி மற்றும் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியதையும் இத்தருணத்தில் நினைவு கூருவதாகவும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை

 மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளுக்காக இரா. சம்பந்தன் நீண்ட காலமாக போரடியதாகவும் தமிழ் அரசியலில் அவர் முக்கிய உறுப்பினராக திகழ்ந்ததாகவும் உலக தமிழர் பேரவை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மாத்திரமின்றி முழு உலகில் உள்ள அரசியல் தரப்பினரால் மதிக்கப்படும் ஒரு தலைவராக சம்பந்தன் திகழ்ந்ததாகவும் அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த பேரவை அதன் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version