Home இலங்கை அரசியல் தமிழினம் ஒற்றுமைப்படாவிடின் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது: எச்சரிக்கை விடுக்கும் செல்வம் எம்.பி.

தமிழினம் ஒற்றுமைப்படாவிடின் எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது: எச்சரிக்கை விடுக்கும் செல்வம் எம்.பி.

0

நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Tamil Eelam Liberation Organization) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் சிறி சபாரத்தினத்தின் சிலையை நேற்று (23) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் விடுதலைக்காக தென்னிலங்கையில் பல சமர்களை செய்து தியாகங்கள் புரிந்து விடுதலைக்காக பாடுபட்ட ஒரு இயக்கமே தமிழீழ விடுதலை இயக்கம். அதன் தலைவருடைய சிலையை இன்று திறந்து வைத்துள்ளோம்.

துப்பாக்கி சத்தம்

துப்பாக்கி சத்தம் இல்லாத போதும் எமது மக்களின் பூர்வீகத்தை ஒழித்து நிலங்களை அபகரிக்கின்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு நிலத்தை பறிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன.

ஒற்றுமை என்பது இப்போதும் இல்லாமல் இருப்பதை எண்ணுகின்ற போது கவலையாக இருக்கிறது.

எங்களது இனத்தை காப்பாற்ற இருக்கின்றோம் என்று கூறுகின்ற தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் எல்லாம் வாய் அளவில் தான் இனத்தின் விடுதலை என்கிறார்களே தவிர, இனத்தின் விடுதலைக்காக ஒற்றுமையாக செயற்பட தயாரில்லை.

மக்கள் விரும்பும் ஒற்றுமையை அவர்கள் செய்ய தயாரில்லை.

தலைவர் சிறிசபாரத்தினம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். விடுதலைப் புலிகள் கூட இந்தியாவில் ஒரு அணியாக இணைந்து செயற்பட்டனர்.

மக்களுக்காக துப்பாக்கி ஏந்தி எவ்வாறு பொது எதிரியை சந்தித்தோமோ அதேபோல் அந்த போராளிகளின் இலட்சியத்தை அடைய வேண்டும்.

விடுதலைப் புலிகள்

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்ற போது எங்களுக்குள் இருந்த வடுக்களை ஒருபக்கம் வைத்து விட்டு எங்களது இனம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகளோடு கைகோர்த்து செயற்பட்டோம் என்பதை பகிரங்கமாக எல்லா மக்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே நாங்கள் ஒட்டுக்குழுக்கள் இல்லை. தேசியத்தை நேசிப்பவர்கள். நாங்கள் இராணுவத்திற்கு எதிராக முதன் முதல் போராடி இருந்தாம்.

எங்களது போராளிகளும் மரணித்திருக்கிறார்கள். ஆகவே அன்று முதல் நாம் மக்களின் இலட்சியத்தற்காகவே செயற்படுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ் கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version