இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளதுடன், சில பகுதிகளில் கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கதவடைப்பு தொடர்பில் அவர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியான விளைவு
குறித்த பதிவில், அமைச்சரவை செய்தித் தொடர்பாளருடனான நேற்று செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, விசாரணை மற்றும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் கதவடைப்பை மதியம் 12 மணி வரை மட்டுப்படுத்த முடிவு செய்தோம்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தங்கள் வணிகங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும் அல்லது சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கடை உரிமையாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்நடவடிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் – அத்தகைய மிரட்டல் மக்களின் ஜனநாயக உரிமையான எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தெளிவாக மீறுவதாகும் தெரிவித்துள்ளார்.
