Home இலங்கை அரசியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த அரசாங்கம் ஏன் தயங்குகின்றது!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த அரசாங்கம் ஏன் தயங்குகின்றது!

0

போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் 76 ஆண்டு சாபம் என மக்களிடம் கூறி மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் கூறிய பொய்களை மூடி மறைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கபட நாடகமாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சியினர் மேடைகளில் கூச்சலிட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு கூச்சலிட்டவர்கள் ஏன் தற்பொழுது மெளனம் காக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய பெயர்களை முதலில் அம்பலப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் மக்களை திசை திருப்பும் வகையில் பல்வேறு நாடகக் காட்சிகளை அரங்கேற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான தேசிய வேலை திட்டத்திலும் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியிலும் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் அதே விதமான செயற்பாடுகளையா இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழு செயல்பாடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை தாமதம் இன்றி அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என சமிந்த விஜேசிறி கோரிக்கை விடுத்துள்ளார் 

NO COMMENTS

Exit mobile version