துறைமுகங்களில் இருந்து சிவப்பு லேபல்கள் குறிக்கப்பட்ட கொள்கலன்களை சோதனைகள்
இன்றி, இதுவரை காலமும் இலங்கை சுங்கம் விடுவிக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின்
சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சங்கத்தின் செயலாளர் அதுல டி சில்வா இதனை
தெரிவித்துள்ளார்.
விடுவிப்பதில் அரசியல் செல்வாக்கு
இலங்கையின் சுங்கம் 1805ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
அந்த நாளில் இருந்து, சிவப்பு லேபல்கள் குறிக்கப்பட்ட கொள்கலன்களை சோதனைகள்
இன்றி இலங்கை சுங்கம் விடுவிக்கவில்லை என்று அதுல டி சில்வா
குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மொத்தம் 309 ‘சிவப்பு
லேபல்’ கொண்ட கொள்கலன்கள் எந்த சோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக
அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாதாரணமாக பச்சை மற்றும் மஞ்சள் லேபல்களைக் கொண்ட கொள்கலன்கள் பிரச்சினை
இல்லாமல் விடுவிக்கப்படும்.
எனினும்,கொள்கலனை இறக்குமதி செய்பவர் சம்பந்தப்பட்ட மோசடி சந்தேகம் தேசிய
பாதுகாப்பு கவலைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் சிவப்பு லேபல்கள்
பயன்படுத்தப்படுவதால், அவை சோதனையின்றி விடுவிக்கப்படுவதில்லை என்று அதுல
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற கொள்கலன்களில் ஆயுதங்கள், விவசாயம் மற்றும் தேயிலைத் தொழில்களுக்கு
சேதம் விளைவிக்கும் விவசாய இரசாயனங்கள் அல்லது போதைப்பொருட்கள் இருக்கலாம்,
இந்தநிலையில் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதில் அரசியல் செல்வாக்கு
பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள்
சங்க செயலாளர் அதுல டி சில்வா தெரிவித்துள்ளார்.
