புதிய இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி
மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்தவரையில் காலை 7 மணி தொடக்கம் 10
மணி வரையான நிலவரப்படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார்
மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் இன்றைய
தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை சுமுகமான முறையில்
தீர்க்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary Election) வாக்களிப்பு நடவடிக்கைகள் மன்னார் (Mannar) மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளன.
இன்று (14) காலை 7 மணி முதல் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று
வருகின்றது.
வன்னி மாவட்டம் (Vanni Electoral District) – மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றது.
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளோர்
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம்பெற்றாலும் பின்னர் மக்கள் அதிகமாக வருகைதந்து வாக்களிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்க்கிலும் காலை நிலவரப்படி அதிகமான
மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.