எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான
பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அந்தக் கட்சிக்கே
அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவாக அமையும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத
நடைமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம்
மற்றும் எதிர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு முக்கியமான சில எதிர்க்கட்சிகள்
தீர்மானித்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி,
பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி
என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பு
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
மக்கள் சக்தி இந்தப் பேரணியில் பங்கேற்காதிருக்கத் தீர்மானித்தள்ளது.
இந்நிலையிலேயே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ
எதிரிமான்ன, ஐக்கிய மக்கள் சக்தியை மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில்
முடிவெடுக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது. அந்த உரிமையை நாம்
மதிக்கின்றோம். எனினும், பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை அந்தக் கட்சி
நிறைவேற்றும் என நம்புகின்றோம்.
நுகேகொடை கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்கும் என நம்புகின்றோம். இன்னும் காலம்
உள்ளது. சில வேளை பங்கேற்காவிட்டால் அது அந்தக் கட்சிக்கே பெரும் பாதகமாக
அமையக்கூடும்” எனக் கூறியுள்ளார்.
