எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காத அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காது பெயரளவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவு
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தீர்மானம் மிக்க தருணத்தில் பெயரளவில் ஆளும் கட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் தீர்மானங்கள் குறித்த விபரங்களை ஏனைய தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாக குறித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
எனவே ஆதரவு வழங்காத தரப்பினரை ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நான்கு ராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காத ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில அமைச்சர்கள் தங்களை பதவி நீக்க வேண்டாம் எனவும் தாங்களாகவே ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.