இலங்கை தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன் சிலர்
இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (14) தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக்
கொண்டிருக்கின்றது.
ஒழுக்காற்று நடவடிக்கை
அதனை பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார், வேறு சிலர் கட்சிக்கும் கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை
தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கப்படும் வரைக்கும் அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து
இடைநிறுத்தப்படுவார்கள்.
கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி
தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது, சில வரைவுகள் செய்யப்பட்டு
இருக்கின்றன.
சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம் ஆகவே அது
எங்களுடைய நிலைப்பாடு.
அதனைத் தொடர்ந்து கோட்டபய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு
முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக
கொடுத்திருக்கிறோம்.
கட்சியினுடைய நிலைப்பாடு
ஆகவே, அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு ஆகையால் அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து
வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது.
ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு
வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அவ்வாறான
குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு அவர்களுடைய வரைவுக்கு இணங்கி
செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது.
தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி, வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில்
இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி.
ஆகவே, மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயல்பட மாட்டோம் மற்றவர்கள் எங்களோடு
எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த
ஆட்சேபனையும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.