Home இலங்கை கல்வி தெற்காசியாவின் சிறந்த கல்வி முறை நாட்டில் உருவாக்கப்படும் : ரணில் உறுதி

தெற்காசியாவின் சிறந்த கல்வி முறை நாட்டில் உருவாக்கப்படும் : ரணில் உறுதி

0

எதிர்காலத்திற்கு ஏற்ற தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில்
உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சிலாபம் (Chillaw), கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்ட கட்டடத்தை
நேற்று (14) மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம்

மேலும் தெரிவிக்கையில், “கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு நவீன கல்வியை
வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

கடந்த கால கல்வி முறைகள்
பற்றி தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தைப் பார்த்து,
தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும்.

நமது
நாட்டின் பலம் கல்விதான். நம் நாட்டில் எப்பொழுதும் சிறந்த கல்வி முறை உள்ளது.
கடந்த காலங்களில் கல்விக்காக இயன்றளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்கினோம். 

நான் வங்குரோத்தடைந்த நாட்டையே பொறுப்பேற்றேன். அப்போது அரசியல் கட்சிகள்
பிளவுபட்டிருந்தன. எனவே, எங்களில் ஒரு குழு ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை
உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம்.

கடன் வழங்கிய நாடுகளின் குழு

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையின்படி, அடுத்த தவணைக்கான
பணத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம். அத்துடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக
கடன் வழங்கிய நாடுகளின் குழு அடுத்த வாரம் கூடவுள்ளது.

அந்தக் கூட்டத்திற்குப்
பின், நாம் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட முடியும்.

இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாத்
திண்டாட்டத்தை 5 வீதமாகக் குறைக்க வேண்டும், வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள
வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

வர்த்தக முதலீட்டு வலயம்

இந்நிலையில், மாதம்பை பொருளாதார வலயத்தை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அத்துடன்
பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயம் மற்றும் முதலீட்டு வலயத்தை
ஆரம்பிப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். பொருளாதார
மாற்றத்தின் ஊடாக, நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்திருக்கிறோம். அதனால் அரசியல்
சாராமல் அதற்கு சகலரும் ஆதரவளிக்க வேண்டும்.

மேலும், வழக்கமான அரசியலை இந்த நேரத்தில்
செய்ய முடியாது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்நாட்டு பிள்ளைகளின்
எதிர்காலத்திற்காக இந்தக் கொள்கைகளை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டும்” எனறும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version