Home முக்கியச் செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல் : சிறிலங்கா இராணுவ அதிகாரி அதிரடியாக கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல் : சிறிலங்கா இராணுவ அதிகாரி அதிரடியாக கைது

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பான
மேல் நீதிமன்ற விசாரணையில் முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவைச்
சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

 முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டபின்னர் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரி 24 அன்று காணாமல்
போகச்செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக
தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற
விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு
எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.

சாட்சியை மிரட்டிய இராணுவ அதிகாரி

 தற்போது அவர்களுக்கான
விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னலிகொட வழக்கின்
முக்கிய சாட்சியான சுரேஸ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை
மிரட்டியதாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான
அதிகாரசபையின் விசாரணை அதிகாரி முறையிட்டார்.

ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை
மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவர் மன்றில் முறையிட்டார்.

அத்துடன் 2025 ஜூன் 6 ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே
தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி

இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்
ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி
நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான்
நீதிமன்றம் உத்தரவிட்டது,
அத்துடன், விசாரணைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, நிரந்தர
மேல் நீதிமன்ற விசாரணையில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை
நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

NO COMMENTS

Exit mobile version