Home இலங்கை அரசியல் நடப்பு ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் : நாடாளுமன்ற விவாதத்திற்கு நாட்கள் ஒதுக்கம்

நடப்பு ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் : நாடாளுமன்ற விவாதத்திற்கு நாட்கள் ஒதுக்கம்

0

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்)  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி  முதல் மார்ச் மாதம்  21ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான நிலையியல் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட உரை 

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா ஜனவரி 9ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மசோதாவின் இரண்டாம் வாசிப்பு (பட்ஜெட் முன்மொழிவுகள் அடங்கிய உரை) பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெற உள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka), இந்த வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6  மணிக்கு ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version