Home இலங்கை அரசியல் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியாத நிலை: சமகால நிலைமையை விளக்கும் இராஜாங்க அமைச்சர்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியாத நிலை: சமகால நிலைமையை விளக்கும் இராஜாங்க அமைச்சர்

0

நாம் தற்போது அரச சேவையை படிப்படியாக வலுப்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியாத நிலை காணப்பட்டது. தற்போது 1942 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த(Ashoka Priyanda) தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மீண்டும் அபிவிருத்தி திட்டங்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் மீண்டும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கு ஆதரவளிப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.

எனவே மக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற முடியுமான இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் நமது கடமையை செய்ய வேண்டும்.

இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் நாம் தற்போது அரச சேவையை படிப்படியாக வலுப்படுத்தியுள்ளோம். அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியாத நிலை காணப்பட்டது. தற்போது 1942 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு பிரச்சினை காணப்பட்டது. அதற்காக முன்வைக்கப்பட்ட புதிய சேவை யாப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், அதில் திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின் போது, நாட்டில் அனர்த்த நிலை ஏற்பட்டது.

ஆனால் நாட்டிலுள்ள பெரும்பான்மையான கிராம உத்தியோகத்தர்கள் உட்பட அரச அதிகாரிகள் அந்த நேரத்தில் முன் வந்து தமது கடமைகளை செய்ததற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version