சவுதி அரேபியாவிற்கும்(Saudi Arabia) இலங்கைக்கும் இடையேயான முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
விசேட கூட்டம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் விசேட கூட்டத்தின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் போது, முதலீடு குறித்து முக்கிய கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயற்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டினை திறமையான செயல்முறைகளுக்கு அமைய முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இது தவிர இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.