எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 80 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பிர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு நன்றி..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சியிலிருந்த போதும் மக்கள் சேவை செய்ய எமக்கு உதவிகளை வழங்கினார். இவை தொடர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிப்பர்.
பொலிஸார் கைப்பற்றியிருந்த பாடசாலை காணியை விடுவித்து தந்தார். இன பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவருக்கு இடமளிக்க வேண்டும்.
கோவிட் காலத்தில் ஜனாசா விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதாகவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார்.
எரிவாயு சிலிண்டர், மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு என எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தந்த ஜனாதிபதிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.