அடுத்த வருடத்திலும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
உண்மையை கூறினேன்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டுக்கு பொருளாதார மீட்சி தேவைப்படுகிறது. எவ்வளவு கசப்பாக இருந்தாலும் மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டும் என்பதே எமது கொள்கை. அதனாலேயே 2020 தேர்தல் காலத்தில் முன்கூட்டியே உண்மையை சொன்னேன்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை இணைத்தோம். அதனை எவரும் ஏற்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஏற்காததால் அனைவரும் வீடுகளுக்குச் சென்றோம். நான் மட்டும் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வந்தேன். எவ்வாறாயினும் நான் எதிர்வுகூறியது உண்மையானது.
அன்று நான் தனியாகவே ஜனாதிபதியாகினேன். அப்போது எந்தவொரு வெளிநாடும் இலங்கைக்குக் கடன் தர தயாராக இருக்கவில்லை.
அதிகரிக்கும் சம்பளம்
சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டுக் கடன்களை கட்டுப்படுத்த சொன்னது. எமது வருமானத்தில் முன்னோக்கி பயணிக்குமாறு ஐஎம்எப் கூறியது.
ஆனால் இன்று எமக்கு கடன் வழங்கும் நாடுகளின் உதவி கிடைத்துள்ளது. விருப்பமே இல்லாமல் வற் வரியை அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது.
அதனால் கடன் வாங்காமல் வருமானத்தை அதிகரிக்க வழி கிடைத்தது. ரூபாய் வலுவடைந்து நாட்டுக்கு நல்லதொரு முன்னேற்ற பாதை கிடைத்து.
எமது தீர்மானங்கள் சில நேரம் மக்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால், அதன் பலனாகவே இன்று அஸ்வெசும – உறுமய போன்ற திட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம்.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்திருக்கிறோம். அடுத்த வருடத்திலும் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.