Home இலங்கை அரசியல் வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் வாகனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பொருட்களுக்குமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 06 மாதங்களுக்கு முன்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதத்துக்குள் பொது போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என நம்புகின்றோம்.

இது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல . ஆறு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஒரு தளர்வு முறையாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளாதவகையில் நாணய கையிருப்பு அளவு வீழ்ச்சியடையாத வகையில், இருப்புக்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையிலேயே இந்த தளர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டின் அரசாங்கம் நிதி ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வரி நிர்வாகம் வலுவாக இருக்கவேண்டும். அதற்கான சட்ட கட்டமைப்பை தயாரிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தோம்.

  

மோசமான பொருளாதார நெருக்கடியின்போது வரி சீர்திருத்தங்களைக்கொண்டு வந்தோம். தொடர்ந்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். 8.2 சதவீதமாக இருந்த வருமானம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 14 சதவீதத்தை எட்டும் என நம்புகிறோம்.   

இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்களுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, அரசாங்கத்தின் வருமானத்தை 15 சதவீதம் வரை அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.

வரி மூலமான வருமானத்தில் கவனம் செலுத்தி, குறிப்பாக வருமான வரி திருத்தத்துக்கு சில நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானது என கருதி செப்டம்பர் 2023 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் தேவையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், வருமானம் 15 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சமகால அரசாங்கமே வறிய மக்கள் பற்றி சிந்தித்து உரிய நடவடிக்களை மேற்கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஜக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பொருளாதாரம் குறித்து அறிவுள்ள ஹர்ஷா, கபீர், எரான் ஆகியோர், பொருளாதாரத்தில் திறமையற்ற அக் கட்சியின் தலைவரை ஏன் பின் தொடர்கின்றார்கள்.

பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ, கபீர் மற்றும் எரான் ஏன் துணை போகின்றார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிரான அநுரகுமார மற்றும் நாணய நிதியத்துடன் இணைந்து முறையாக செயற்பட முடியாத சஜித்தின் கொள்கைக்காக இவர்கள் முன்நிற்கின்றார்கள் என்பதையும் நம்ப முடியாதுள்ளது.

NO COMMENTS

Exit mobile version