Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மக்களின் நிலை: ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மக்களின் நிலை: ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்

0

நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார – உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிரமப்படும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத்திட்ட பிரிவு கடந்த 11 – 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுத்திருந்த மதிப்பாய்வு ஒன்றிற்கமையவே மேற்கண்டவாறு கூறியுள்ளது. 

மேலும் விளக்குகையில், “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்றது.

 

காலநிலை மாற்றம் 

இருப்பினும், அந்நாட்டின் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிமுறைகளை கையாண்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

அத்துடன், இலங்கை அண்மை காலமாக காலநிலை மாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. 

அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த 11 தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உலக உணவு திட்டத்தின் வழிகாட்டலின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள முகவர், சிவில் சமூக அமைப்புக்கள், நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து தகவல்களை திரட்டும் வகையில் மதிப்பாய்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தன.

உதவி திட்டங்கள் 

அதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் செயற்றிட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் உலக உணவு திட்டத்தினால் கடந்த ஜுன் மாதம் நாடளாவிய ரீதியில் 7012 பாடசாலைகளுக்கு 421 மெட்ரிக் தொன் எண்ணெய் மற்றும் 271 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம் ஆகியன பகிர்ந்தளிக்கப்பட்டன.

அதேபோன்று, ஆரோக்கியமான உணவு எமது உரிமை எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய போசணை மாதத்தை (ஜுன்) முன்னிட்டு உலக உணவுத்திட்டத்தினால் பரந்துபட்ட அளவிலான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டன.

மேலும், நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டு இருப்போருக்கு கடந்த மாதம் மொத்தமாக 592 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதுடன், எதிர்வரும் 6 மாதகாலத்துக்கு நலிவுற்ற சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியின் பெறுமதி 84,425 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உலக உணவுத்திட்டம் கருத்து வெளியிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version