Home இலங்கை அரசியல் அரசியல் கைதிகள் தொடர்பில் ஐ. நா வதிவிடப்பிரதிநிதி வழங்கியுள்ள உறுதிமொழி

அரசியல் கைதிகள் தொடர்பில் ஐ. நா வதிவிடப்பிரதிநிதி வழங்கியுள்ள உறுதிமொழி

0

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும்(Gajendrakumar Ponnambalam) , ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான வியாழக்கிழமை (05.12.2024) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிலையில், ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சின் அழைப்பின்பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, நாட்டின் சமகால நிலைவரம், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டை தொடர்ந்து முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் இயலுமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி வதிவிடப்பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டறிந்தார்.

ஊழல் மோசடி

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், இப்புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் ‘தற்போது இந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், ஏற்கனவே நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்வதையோ அல்லது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ நியாயப்படுத்தமுடியாது.

எனவே அடுத்துவரும் ஒருவருடகாலத்துக்குள் இவ்விரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்துக்கு இருக்கிறது’ எனவும் அவர் ஐ.நா வதிவிடப்பிரதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சிடம் சுட்டிக்காட்டினார்.

தமிழரசுக் கட்சி

அதேபோன்று இப்போது தமிழரசுக்கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் 10 உறுப்பினர்களும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அதனை முன்னிறுத்தி அவரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகள் பற்றியும் மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கு விளக்கமளித்தார்.

மேலும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேர் தொடர்பில் பேசப்பட்டபோது, அவர்களது விடுதலை குறித்து தானும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் கஜேந்திரகுமாரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version