Home இலங்கை அரசியல் சஜித் தொடர்பில் சுமந்திரன் அணி எடுத்துள்ள தீர்மானம்! சட்டத்தரணி அம்பலப்படுத்தும் தகவல்

சஜித் தொடர்பில் சுமந்திரன் அணி எடுத்துள்ள தீர்மானம்! சட்டத்தரணி அம்பலப்படுத்தும் தகவல்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) ஆதரிக்க தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்(M.A.Sumanthiran) அணி ஏற்கனவே தீர்மானித்து விட்டது.  இந்த முடிவை அறிவிக்க மிகத் தந்திரமாக சுமந்திரன் தரப்பு காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்று சட்டத்தரணி சிறிகாந்தா(Srikantha) தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுமந்திரன் தரப்பின் முடிவு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தமிழரசுக் கட்சியின் இன்றைய கோலம் எனக்கும், உங்களுக்கும், புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்குமே தெரிந்ததுதான்.  தமிழரசுக் கட்சி ஒரு செங்குத்தான பிளவை எதிர்நோக்கியிருக்கின்றது. 

முடிவெடுக்க முடியாமல் கட்சி திணறுகின்றது என்று அர்த்தமல்ல. நண்பர் சுமந்திரனும் அவரது தரப்பினரும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். 

அவர்கள் கட்டாயமாக சஜித் பிரேமதாசவைத் தான் ஆதரித்து செயற்படப் போகின்றார்கள். அது என்றைக்கோ முடிந்த காரியம்.  

அதனால் தான்  தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் தம்பி சுமந்திரன் தரப்பு துள்ளிக் குதிக்கின்றார்கள்.   ஏனெனில் அவர்கள் அஞ்சுகின்றார்கள்.  அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Disanayakke) தொடர்பில் பெரிதாக தமிழ் மக்கள் கவலைப்பட போவதில்லை.  இது அவருடைய கணக்கு.

ரணில் விக்ரமசிங்கவைப்(Ranil Wickremesinghe) பொறுத்தவரையில், பெரமுனவின் ஆதரவோடுதான் அவர் போட்டியிட முடியும். இல்லையெனில் அவராலும் முடியாது.  பழைய ரணில் அல்ல அவர்.  ஐதேக இரண்டாக உடைந்திருக்கின்றது.  அதில் ஏ  அணி சஜித்தோடு. ஐதேகவின் 90 வீதமானவர்கள், நீண்ட நெடுங்கால ஐதேகவினர் உறுப்பினர்கள் எல்லாம் சஜித்தோடு சென்றுவிட்டார்கள்.  

ரணிலோடு நிற்பது விரல்விட்டு எண்ணக் கூடிய பழைய ஐதேக பிரமுகர்கள் தான். ஆகவே தனித்து அவரால் தேர்தலைச் சந்திக்க முடியாது.  பெரமுன ஆதரித்தால் அவரால் முடியும்.

சஜித்தா, ரணிலா என்ற கேள்வி வரும் போது பெரமுனவால் ஆதரிக்கப்படுகின்ற ரணிலை இட்டு தமிழ் மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்பது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் குழுவினருடைய அனுமானம் அல்லது தீர்மானம்.  அது நியாயமானது.  தர்க்க ரீதியானது.  யதார்த்தமானது. 

ஓரங்கட்டப்பட்டு விட்ட சம்பந்தன்

சஜித்தின் தரப்பினை நான் ஐக்கிய மக்கள் சக்தி என்று சொல்ல மாட்டேன்.  அது ஐதேக தான்.  ஐதேகவின் பாரம்பரிய தரப்பினரே அங்கு உள்ளனர்.  இவ்வாறான நிலையில், சஜித்தின் பக்கம் இருக்கும் ஐதேகவின் ஏ அணியை சுமந்திரன் தரப்பு ஆதரிக்க போகின்றது.   

தமிழரசுக் கட்சியின் ஏனைய, சிறீதரன்(S.Shritharan), சிறீநேசன்(G.Shrinesan), அரியநேத்திரன்(P.Ariyaneththiran), சேனாதிராஜா(Mavai Senathirajah), சரவணபவன்(Sarawanabavan), சட்டத்தரணி தவராசா(Thavarasa) மற்றும் தமிழரசுக் கட்சியுடைய பல பிரமுகர்கள் அத்துடன் கிழக்கில் உள்ளவர்களும் சேர்த்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் நிற்கின்றார்கள்.  அதில் சந்தேகம் இல்லை.  

ஆனால் முடிவெடுப்பதை சுமந்திரன் குழு மிக தந்திரமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பிறகு தீர்மானிப்போம் என்று சம்பந்தனுடைய ஆசியோடு தீர்மானித்திருக்கின்றது.  

இங்கு ஒன்று சொல்ல வேண்டும், சம்பந்தர்(R.Sampanthan) எப்போதோ கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்.  இதை எங்கள் கண் முன்னாலே வருத்தத்தோடு கண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version