Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சி உறுப்பினரிடம் 1000 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள NPP பிரதி அமைச்சர்

மொட்டுக் கட்சி உறுப்பினரிடம் 1000 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள NPP பிரதி அமைச்சர்

0

பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரான மஹிந்த பத்திரனவுக்கு (Mahinda Pathirana) எதிராக கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, இதற்காக 1000 கோடி ரூபாய் (10 பில்லியன்) நட்டஈடு வழங்குமாறு பிரதி அமைச்சர் இந்த வழக்கின் மூலம் கோரியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்த பத்திரன தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றே இந்த சட்ட நடவடிக்கைக்குக் காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தெரிவிப்பு 

அந்தப் பதிவில், கொழும்பு சினமன் லைஃப் சொகுசு குடியிருப்பு வளாகத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

இந்தச் சொத்து வாங்குவதற்கான நிதி ஆதாரம் சந்தேகத்திற்குரியது என்றும், இது கையூட்டு மூலம் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என சுனில் வட்டகல நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட கௌரவத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டே இந்தப் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் கணக்கை மேற்கோள் காட்டிய பதிவு 

சச்சின் ரத்வத்த என்ற பெயரிலான ஒரு முகநூல் கணக்கை மேற்கோள் காட்டியே மஹிந்த பத்திரன இந்தப் பதிவை இட்டுள்ள நிலையில் அந்தக் கணக்கின் நம்பகத்தன்மையும் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மஹிந்த பத்திரனவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற சுனில் வட்டகல, சட்டத்தரணியாகவும் செயற்பட்டு வரும் நிலையில் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்பட்ட இந்தத் தகவல், தனது பொது நற்பெயருக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version