Home இலங்கை அரசியல் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத பிரதான வேட்பாளர்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத பிரதான வேட்பாளர்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

0

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முனனிலைப்படுத்தவில்லை என தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

மாறாக அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதாரப் பிரச்சினை, மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சனைகளை தான் முன்வைத்துள்ளார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (11.09.2024) மட்டக்களப்பு பெரியபோரதீவு பகுதியில் மக்கள்
சந்திப்புகளிலும் தேர்தல் பிரசார பணிகளிலும் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு
கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

அவர் மேலும்
தெரிவிக்கையில், ”பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த நாட்டில் நீண்ட காலமாக  ஏற்பட்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்
கொடுத்தல், சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கொடுக்க வேண்டும்
என்ற எந்த ஒரு வாசகங்களும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் எனது தமிழ் தலைமைகள் சமஸ்டி அடிப்படையிலான
தீர்வை முன்வைத்தால் நாங்கள் அனைவரும் அவர்களை பரிசீலிக்க தயார் என்று தான் கூறியிருந்தனர். மாறாக அவர்களின் எந்த ஒரு தேர்தல்
விஞ்ஞாபனத்திலும் சமஷ்டி தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

2015 நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏக்கிய ராஜ்ய என்பதற்குள் நாங்கள்
சமஷ்டியையும் தேடினோம், அதுகூட இவர்களது விஞ்ஞாபனங்களில் இல்லை. எனவே அரசியல்
தீர்வை முன்னிலைப்படுத்தாத வேட்பாளர்களாகவே இந்த பிரதான மூன்று வேட்பாளர்களும்
செயற்பட்டுள்ளனர்.

மாறாக அவர்கள் பொருளாதாரப் பிரச்சினை, மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சனைகளை தான்
அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்துள்ளார்கள். இவ்வாறானவர்களுக்கு
வாக்களிக்க வேண்டிய அவசியம் எமது தமிழ் மக்களுக்கு இல்லை என்பதை எமது மக்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.

சஜித் பிரமதாச நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு 1126 பௌத்த
விகாரைகளை வடகிழக்கிலே அமைப்பதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று அதனை
தற்போதும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதுபோல் அவர் ஆயிரம் பௌத்த
பாடசாலைகளை ஆரம்பிக்க இருக்கின்றார்.

வட கிழக்கை பிரித்த கட்சி

எனவே சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கின்ற போது நாங்கள் இடுகின்ற ஒவ்வொரு புள்ளடியும், ஒவ்வொரு பௌத்த
விகாரைகளுக்கும் நடப்படுகின்ற அடிக்கல்லாகதான் அமையும் என்பதை எமது தமிழ்
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு முன்னுரிமைப்படுத்தி வாக்களிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள
முடியாது.

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறுவது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. அவர்
தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரோ இல்லையோ என்பதற்கு அப்பால்
அமைச்சர்களை மாற்றுவதும் அமைச்சர்களை நியமிப்பதுமாகத்தான் இருக்கின்றார். இது
ஒரு சட்டத்துக்கு முரணான விடயம் என நான் நினைக்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில்
தேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செயலகம் என்பன கண்காணிக்க
வேண்டும். எனினும் தேர்தல் வரும் வரையிலும் அவர் செய்வதை செய்து கொண்டே
இருக்கின்றார்.

இந்த ரணில் விக்ரமசிங்க தான் ஒரு தீர்வுக்காக
போராடிக் கொண்டிருந்த எம்மை சிதைத்தவர் என்பதை அவரே ஒப்புக்
கொண்டிருக்கின்றார். இவ்வாறானவரை நாம் மீண்டும் ஜனாதிபதியாக கொண்டு வந்தால்
இன்னும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

அதுபோல் அனுரகுமார திசாநாயக்கவைப்பற்றி (Anura Kumara Dissanayake) சொல்ல வேண்டியது இல்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்த இணைந்த வட கிழக்கை பிரித்த கட்சியைச்
சார்ந்தவர்.

அதுபோல் தமிழ் மக்களுக்கு உரிய சுய நிர்ணய உரிமையை வழங்கக்கூடிய
விடயங்கள் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. மாகாண சபை முறைமையை
அடுத்த அரசியலமைப்பு திருத்தம் வரும் வரையில் அங்கீகரிக்கலாம் என்ற விடயத்தை
குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் 

எனவே எவருமே சமஷ்டி அடிப்படையில்லான தீர்வை
வழங்குவதற்குரிய மனோநிலையில் இல்லை.

எவ்வாறாயினும் வடகிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு இனப்பிரச்சினை
இடம்பெற்றிருக்கின்றது, படுகொலைகள் இடம்பெற்றுள்ளன எனவே அவர்களை அங்கீகரித்து
அவர்களுக்குரிய நீதியை வழங்க வேண்டும் என எவரும் கூறவில்லை.

இதனை விட வெட்கக்கேடான விடயம் என்ன வெனில் முள்ளிவாய்க்காலிலே மூன்றரை இலட்சம் மக்களை
இழந்திருக்கின்றோம், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்திருக்கின்றோம்
மக்கள் இன்னும் நிற்கதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்காக
மன்னிப்பு கோருவதற்கு கூட அவர்கள் தயார் இல்லை.

இவ்வாறானவர்கைளையா நாம் ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி தான் இம்முறை பொது வேட்பாளர் என்ற
விடயத்தின் கீழ் நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றேன்.

பொது வேட்பாளருக்கு அளிக்கின்ற வாக்குகள் அனைத்தும் தென் இலங்கையை சிந்திக்க
வைக்கும். தற்போது அவர்கள் சிந்தித்து விட்டார்கள். அதன் காரணமாக வடகிழக்கிலே
அவர்கள் முகாமிட்டுள்ளார்கள்.

இலங்கையிலே உள்ள 25 மாவட்டங்களில் வடகிழக்கில்
உள்ள 8 மாவட்டங்களில் தான் எமது பிரசாரப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் வடகிழக்கில்,
முகாம் இட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்
கொண்டுள்ளார்கள்.

சங்கு சின்னத்துக்கு வாக்களியுங்கள்

அவர்கள் எமது மக்களின் வாக்குகளை சிதறடிக்க
நினைக்கின்றார்கள். அவர்கள் இங்கு உள்ள மக்களை சிந்திக்கத் தெரியாதவர்கள் என
நினைக்கின்றார்களா. அவர்கள் எங்களை முட்டாளாகி கொண்டு இருக்கின்றார்களா.

அதுபோல் அவர்களது முகவர்களாக இங்கு பலர் செயற்படுகின்றார்கள்.

அவ்வாறு முகவர்களாக செயற்படுபவர்கள் ஒரு விடயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்
தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது
இம்முறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி
சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு எடுத்துக்கொண்டுள்ள முயற்சியை இந்த முகவர்கள்
சிதைக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நான் வடகிழக்கிலே
உள்ள எட்டு மாவட்டங்களிலும் எனது பிரசாரப் பணியை மேற்கொண்டுள்ளேன். அந்தந்த
மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். அந்த மக்கள்
அனைவரும் இம்முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு திடசங்கற்பம்
பூண்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனது சின்னமாகிய சங்கு சின்னத்துக்கு எதிர்வருகின்ற 21ஆம் திகதி வாக்களிக்குமாறு
உங்களை வேண்டுகின்றேன்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version