Home உலகம் ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழ் இளையோர் மாநாடு – 2024

ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழ் இளையோர் மாநாடு – 2024

0

ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தமிழ் இளையோர் மாநாடு 2024” இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

தெளிந்த பார்வை

மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது.

மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills), இளையோர் அமைப்பின் நோக்கம் மற்றும் வேலைதிட்டங்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம், எமது வரலாறு, தமிழீழ அரசியல் மற்றும் பூகோள அரசியல் போன்ற தலைப்புகளும் இரண்டாவது நாளில்,சிங்கள அரசின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் பறிபோகும் தமிழர் தாயகம், பொருளாதார வலுவூட்டல் போன்ற தலைப்புக்களில் வளவாளர்களால் கருத்தூட்டல் வழங்கப்பட்டது.

அவர்கள் தங்கள் அனுபவங்களூடாக விடயப்பரப்புக்களை எடுத்துரைக்க, இளையோர்களும் அவர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

அத்தோடு,இளையோர் அமைப்பினரால் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை ஒவ்வொரு இடைவேளையின் போதும் இளையோர்கள் மிக ஆர்வத்துடன் படித்து குறிப்புக்கள் எடுத்து கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

தமிழ் இளையோர் மாநாடு

இரண்டு நாட்களின் முடிவில் இளையோர் மாநாட்டில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் அனைத்துலக இளையோர் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.

இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வுகளோடு, உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்ட இளையோர்களின் அகநிறைவோடு உறுதியேற்று “தமிழ் இளையோர் மாநாடு 2024” சிறப்போடு நிறைவுபெற்றது.

தமிழீழத் விடுதலைப்போராட்டத்தை இளையோர் கரமேற்று தொடர்ந்தும் முன்னகர்த்த வேண்டுமென்ற தமிழீழத் தேசியத்தலைவரின் அறைகூவலை உளமேற்று இளையோர்கள் பயணிக்கிறார்கள் என்பதை இந்த இளையோர் மாநாடு கட்டியம் கூறிநிற்கிறது.

இம் மாநாட்டில் யேர்மனி, நோர்வே, பெல்சியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version