ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி இரத்தினபுரி நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலதா அத்துகோரள
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும், ஒரு பக்கம் எங்களின் மாபெரும் தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.
எமது தாய்க்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் இருவரும் அரசியல் எதிரிகளாகி விட்டனர் என்றும் தனது பதிவி விலகல் உரையில் அவர் தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். எல்லோரும் ஒன்று சேர முயற்சிக்கும் இந்த நேரத்தில், எங்கள் முகாமைப் பிரித்து இரண்டு பேருடன் போட்டியிடும் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு தலைவர்களும் எதிரெதிராகப் போட்டியிடும் முடிவு சுயநல நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட அரசியல் முடிவு என்று நான் நம்புகிறேன்.
பதவி விலகல்
எதிர்காலத்தில் வரலாறு அதை நிரூபிக்கும்.
அதைப்பற்றி நான் மௌனம் சாதித்தால் அந்த பாவத்திற்கு மறைமுகமாக நானும் பங்களிப்பவன் ஆகிவிடுவேன்.
எனவே, மிக முக்கியமான இந்த விடயத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.
அது இரத்தினபுரி மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் எதிரான முடிவாக இருக்கக் கூடாது என்பதும் எனது நம்பிக்கையாகும்” என தலதா அத்துகோரள கூறியுள்ளார்.
இந்நிலையில், தலதா அத்துகோரளவின் பதவி விலகளை ஐக்கிய தேசிய கட்சி வரவேற்கும் விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.
“சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழாரம் சூட்டியுள்ளார்.
தலதாவுக்கு அழைப்பு
எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘தலதா அத்துகோரளவின் உரை ஏனையோருக்கும் முன்தாரியாக அமைந்துள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அவர் தோற்றால் அது நாட்டின் தோல்வியாகவே அமையும் என்பதை தலதா அத்துகோரள கூறியுள்ளார்” வஜிர தெரிவித்திருந்தார்.