குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தரப்பு விமர்சித்த அனைத்தையும் சரி என்று குறிப்பிடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்துக்காக சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று துறைமுக நகர திட்டத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியா மற்றும் சீனா
“இந்தியா மற்றும் சீனா எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்த இந்தியா மற்றும் சீனா அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்த போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் நிர்மாண பணிகளுக்கு சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அப்போது குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு துறைமுக அபிவிருத்தி
தற்போது கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்துவதாக சீனாவுக்கு உத்தரவாதமளித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் நாட்டுக்காக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினர் திட்டத்தின் நன்மைகளை ஆராயாமல், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் பல வெளிநாட்டு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்காமல் போயின” என்றார்.