Home இலங்கை அரசியல் பிரதமர் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஸ்ரீகாந்தா பகிரங்கம்

பிரதமர் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஸ்ரீகாந்தா பகிரங்கம்

0

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (12.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. 

தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

அவர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் (11.04.2025) நடைபெற்ற போது,
ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிக பெரிய மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மாவிட்டபுரத்திற்கு சென்றது மிக மலிவான தேர்தல் பிரச்சாரத்திற்காகவே, மாவிட்டபுரத்திற்கு கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்று இருக்கின்றார்கள் அவர்கள் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை.

பிரதமரின் அதிரடி வருகையால் பக்தர்களின் வயிற்று எரிச்சலை தான் பெற்று சென்றுள்ளனர். இந்த மலிவான அரசியலுக்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.

இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார் பிரதமர், தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக பிரதமர் என்ன சொல்லப் போகிறார் ? ” என தெரிவித்தார். 

 

https://www.youtube.com/embed/C4GkYdaN3Rk

NO COMMENTS

Exit mobile version