Home முக்கியச் செய்திகள் இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள், காவல்துறையினர், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை(1) சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார்.

சிவஞானம் சிறீதரனின், இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் அவதானிக்கப்படமை தொடர்பாக கொடிகாமத்தில் நேற்று(29) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார்.

சிறீதரனுக்கு அச்சுறுத்தல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் இனந்தெரியாதவகையில் முகத்தையும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்வது எனது வீட்டு கண்காணிப்பு கமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, காவல்துறையினர், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது மிகத் துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பைக்கில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டனர்.

பின்னணியில் யார்

அதே பாணியில் உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி ஏன் இராணுவம் கடற்படை, விமானப்படை, காவல்துறையினர், உளவுப்பிரிவு செய்யக்கூடாது என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

இதற்கு பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பது மிகத் துலாம்பரமாக தெரிகிறது.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் இருப்பது என்பதை மிகத்தெளிவாக சொல்லிவைக்க விரும்புகிறேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version