இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வழிபாட்டுத் தலங்களுக்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பெருமளவான மேலதிக காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் (F.U. Wootler) குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்
இதற்காக சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தை பாதுகாப்பான முறையில் செலவிடுவதற்கு விசேட திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அனைத்து தலைமை காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகள், அந்தந்த காவல்துறை பிரிவுகளில் உள்ள அனைத்து மதத் தலங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.
இதனையடுத்தே, அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
