ரஷ்யாவின் (Russia) கிழக்கு கடற்கரையில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்தவகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா மற்றும் ஹவாய்க்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபத்தான சுனாமி அலைகள்
இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் 19.3 கி.மீ ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 125 கி.மீ கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் ஆபத்தான சுனாமி அலைகளின் அறிகுறிகளைக் கவனிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கனடா, ரஷ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளும் சுனாமி எச்சரிக்கையில் உள்ளன.
அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவுருக்களின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
