Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து: மறைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து: மறைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவின் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளில் ஒன்றை இன்றும் மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்

கம்மன்பில அங்கு மேலும் தெரிவித்ததாவது, காவல்துறையினரின் முக்கிய விசாரணையில் சந்தேக நபராக மாறியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்குமாறு ரணில் விக்ரமசிங்கவின் குழு பரிந்துரைத்துள்ளது.

ரவி செனவிரத்ன அந்த பதவியில் இருக்கும் வரை காவல்துறையினரிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது, குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ரவி செனவிரத்னவிற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம்

கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

 

ரவிசெனவிரத்னவை உடனடியாக பதவியில் இருந்து நீக்காவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் கொண்டு வருவோம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version