Home முக்கியச் செய்திகள் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் : பிரித்தானியாவின் அதிரடி தீர்ப்பு

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் : பிரித்தானியாவின் அதிரடி தீர்ப்பு

0

இந்திய பெருங்கடல் (Indian Ocean) பிரதேசத்தில்இருக்கும் சிறிய தீவான டியாகோகார்சியாவில் (Diego Garcia) இலங்கைத் தமிழர்களை தடுத்து வைத்திருந்தமை சட்டவிரோதமானது என பிரித்தானியாவில் (United Kingdom) நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

மாலைதீவுக்கு தென் மேற்கேயும், ஆபிரிக்க கண்டத்தின் தென் பகுதிக்கு வட மேற்கேயும் உள்ள சாகோஸ் தீவுகள் கூட்டத்தில் இருக்கும்
ஒரு சிறிய தீவு டியாகோ கார்சியா.

இந்தியப் பெருங்கடலில் இராணுவ கேந்திர ரீதியாக டியாகோ கார்சியா மிகவும் முக்கியமான ஒரு இடமாகும். அங்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன.   

இராணுவப் பிரதேசம்

இது முற்றாக இராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு தீவாகும். அங்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. தீவின் ஒரு பக்கம் அமெரிக்க கடற்படையும் மறுபக்கம் பிரித்தானிய படைகளும் உள்ளன.

இந்நிலையில் இலங்கையிலிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் படகு ஒன்றில் பயணமான 60ற்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கில் பயணமாகிய வேளையில், அந்த தீவிற்கு அருகில் செல்லும் போது, படகு பழுதானதால், அந்த தீவில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் டியாகோ கார்சியா தீவு முற்றாக இராணுவப் பிரதேசம் என்பதால், அங்கு இறங்கிய அனைத்து தமிழர்களும் தடுத்து
வைக்கப்பட்டனர்.

மிகவும் இரகசியமான இராணுவ தளம் என்பதால், அங்கு தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட தடுப்பு பகுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அங்கு தங்கியிருந்த பெரும்பாலானவர்கள் பிரித்தானிய பெருநிலப் பரப்பிற்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.

எனினும் இந்த தீர்ப்பும் அவர்கள் பிரித்தானிய பெருநிலப் பரப்பிற்கு கொண்டுவரப்பட்ட சம்பவமும் தனித்துவமான ஒன்று, இதை
எதிர்காலத்தில் ஒரு முன்னுதாரணமாகக் காட்ட முடியாது எனவும் பிரித்தானிய அரசு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

அவர்கள் வழக்கு அசாதாரணமானது என்றும் ஒரே ஒரு முறை மாத்திரமே கவனத்தில் எடுக்கக் கூடியது என்றும் பிரித்தானிய அரசு அறிவித்திருந்தது.

பின்னர் அந்த பெருங்கடல் பகுதியில் இருக்கும் பிரதேசங்களுக்கான உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்தது. பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி மார்கரெட் ஓபி அம்மையார், தஞ்சக் கோரிக்கையாளர்களை அந்தத் தீவில் பிரித்தானியா தடுத்து வைத்திருந்தது
சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version